இந்த பாரத தேசத்தில் பல நாடுகள் உள்ளன. அதில் பலமொழி பேசும் பல இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் ஆரிய இன மக்கள் எனப்படு வோர் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களில் கூறப்பட்டுள்ள வாழ்வியல் நடைமுறைகளைக் கடைப் பிடித்து வாழ்ந்தனர். இந்த நான்கு வேதங்களிலும் நான்குவிதமான ஜோதிட வழிமுறைகள் சுருக்கமாகக் கூறப் பட்டுள்ளன.
ரிக் வேதத்தில் கூறப்பட்ட ஜோதிட முறை "அர்ச்ச ஜ்யோதிஷம்' எனப்படும். இதில் 36 சுலோகங்களில் ஜோதிட நெறிகள் கூறப்பட்டுள்ளன.
யஜுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளவை "யாஜுஷ் ஜ்யோதிஷம்' எனப்படும். இதில் 39 விதமான ஜோதிட சுலோகங்கள் கூறப் பட்டுள்ளன.
அதர்வண வேத ஜோதிடம் "அதர்வண ஜ்யோதிஷம்' எனப்படும். இதில் 132 சுலோகங்களில் ஜோதிடப் பலன்கள் கூறப் பட்டுள்ளன.
சாமவேத ஜோதிட முறை காலப்போக்கில் ஆரிய இன மக்களால் கைவிடப்பட்டு அழிந்துவிட்டது. இவை வேதகால ஜோதிட முறைகளாகும்.
"காசியப ஸம்ஹிதை'யின்படி வேத ஜோதிடத்தின் மூல ஆசிரியர்களாக சூர்யர், பிதாமஹர், வியாசர், வசிஷ்டர், அத்ரி, மரீசி, பராசரர், கஸ்யபர், நாரதர், கர்கர், மனு, ஆங்கீரஸர், லோமஸர், பௌலசர், ச்யவனர், யவனர், மரு, சௌனகர் ஆகிய 18 பேரைக் கூறுவார்கள்.
ஜோதிடப் பலன் கூறும் காலக் கணக்கீட்டை வராகமிகிரருக்கு முற்பட்ட காலம், பிற்பட்ட காலம் என இருவகையாகப் பிரித்துக்கூறலாம். வராகமிகிரர் கூறிய கிரகங் களின் சுழற்சிப் பயணக்கணக்கீட்டினைக் கொண்டு ஜோதிடப்பலன்கள் இப்போது கூறப்படுகிறது.
இன்றைய நாளில் ஜோதிடப் பலன் கூறும் முறை பழமையான வேத ஜோதிட முறையல்ல. இது வராகமிகிரரின் வானியல், கிரகங்களின் சுழற்சி ஆய்வுமுறையாகும். வேதஜோதிட முறையில், கிரகங் களைக் கணக்கிட்டுப் பலன் கூறப்பட வில்லை. ஒவ்வொரு மனிதனின் முற்பிறவி கர்மவினை அடிப்படையில்தான் இப்பிறவி வாழ்வின் நன்மை- தீமைப் பலன்கள் கூறப்பட்டன. அதேபோன்று வேதஜோதிட முறையில், இன்றைய ஜோதிடர்கள் கூறுவது போன்று முற்பிறவி கர்மவினைகளை பாவ- சாபப்பதிவுகளைத் தீர்க்கப் "பரிகாரம்' என்று எந்த ஒரு வழியும் கூறப் படவில்லை.
வராகமிகிரரின் காலத்திற்குப்பின் உருவாக் கப்பட்ட ஜோதிடமுறையை "ஜ்யோதிஷ வேதம்' எனக் கூறத்தொடங்கினர். இதனை உருவாக்கியவர் யார் என்று தெளிவாக அறிய முடியவில்லை. அந்தந்த காலகட்டத்தில் கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு, அவரவர் விருப்பப்படி, ஜோதிடம், ஆரூடம்& சோழி, பிரன்னம் (அதில் எட்டுவிதம்), குறிசொல்லுதல், வாக்கு முறை, பட்சி சாஸ்திரம், எண்கணிதம், பெயர் எழுத்து ஜோதிடம் என தங்கள் கருத்துகளை ஜோதிடத்தில் இணைத்து விட்டார்கள். எனவேதான் தெளிவான பலனைக் கூறுவதென்பது கடினமாக உள்ளது.
இனி, சித்தர்கள் கூறிய தமிழ் ஜோதிட முறையில், முற்பிறவிக் கணவனையே இப்பிறவியிலும் அடையும் பெண்ணின் ஜாதகத்தைக் காண்போம்.
இந்தப் பெண்ணின் ஜாதகத்தில் இவளது இப்பிறவிக் கணவனைக் குறிக்கும் உதாரண கிரகம் செவ்வாய் ஆகும்.
இந்த ஜாதகியைக் குறிக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். எந்த ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்திலும் மேஷம்முதல் மீனம்வரையுள்ள 12 ராசிக்கட்டங் களில் ஜாதகியைக் குறிக்கும் கிரகமான சுக்கிரனுக்கு 2-ஆவது ராசியில், அவளின் இப்பிறவிக் கணவனைக் குறிக்கும் கிரகமான செவ்வாய் இருந்தாலும் அல்லது 12-ஆவது ராசியில் சுக்கிரன் இருந்தாலும் இவளுக்கு கணவன் தேடி வரமாட்டான். பெண் வீட்டார்தான் முயற்சி செய்து மாப்பிள்ளையை தேடி மணம்முடித்து வைக்க வேண்டும். சில பெண்கள் தங்கள் முயற்சியினால் மாப்பிள்ளையைத் தேடி மணம்புரிந்து கொள் வார்கள்.
இதுபோன்று பெண் கணவனைத் தேடியலையும் நிலைக்கும் ஒரு காரணம் உண்டு. முற்பிறவியில் இந்தப் பெண் தன் கணவனை மதிக்காமல், கணவனுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாமல், சுகம்தராமல் தன் விருப்பப்படி வாழ்ந்ததால்- தன்னைக் கட்டிய கணவனுக்கு செய்த துரோகத்தால் இப்பிறவியில் ஒரு காளையைக் கரம்பிடிக்க அளவுகடந்த காலதாமதம், தேடியடையும் நிலை உண்டானது.
இவள் தன் கணவன்மீது அதிக பாசமாக இருப்பாள். ஆனால் கணவனுக்கு இவள்மீது அவ்வளவாக பாசம் இராது. இவள் தன் குடும்ப வாழ்வில் கணவனை அனுசரித்து, அடங்கி, அமைதியாக வாழவேண்டும். தன் குடும்பத்தையும், கணவனையும் இவள்தான் பொறுப்பாக இருந்து காப்பாற்ற வேண்டும். இதுவும் ஒரு முற்பிறவி சாபத்தாக்கம்தான்.
செல்: 99441 13267